இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற மோதல்களின் விளைவுகள், தற்போதுள்ள சவால்களால் அடையாளங்காணப்படுகின்றன. நல்லிணக்கத்திற்கான ஆர்வமும், பல்வேறு வகைகளில் காணப்படுகின்ற மனத்தாங்கல்களுக்கான தீர்வுகளும் முயற்சிக்கப்படும் அதேவேளை, தாம் முகங்கொடுத்த ஆழ்ந்த துன்பங்களிலிருந்து பாதிக்கப்பட்ட பலரும் இன்னமும் நீங்கவில்லை. இவ்வாறான சூழலில், மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்து ஏற்றுக்கொள்ளுதலானது, சமூக ஆறுதலுக்கும் மீறல்கள் மீள இடம்பெறாமைக்கும் முக்கியமானதாகும்.
உண்மையை அறிந்துகொள்வதற்கான இலங்கையர்களின் உரிமையை நிலைநாட்டுவதன் மூலம், உண்மையைத் தேடும் பொறிமுறையானது, தேசிய ஒற்றுமை, சட்டவாட்சி, நல்லிணக்கம், மீறல்களும் ஒற்றுமையின்மையும் மீள இடம்பெறாமை ஆகியவற்றுக்குப் பங்களிக்கும்.
2023 ஜனவரி 16 இல் அமைச்சரவையானது, உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான பொறிமுறையொன்றை இயக்குவதற்கான ஆரம்பப் படிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தது.
இதற்கமைவாக, 2023 மே 29 இல், அமைச்சரவையானது, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள், மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்த அமைச்சினாலும், வெளிவிவகார அமைச்சினாலும் சேர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கையில் உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான பொறிமுறையொன்றைத் தாபிப்பதற்கான முன்மொழிவொன்றை அங்கீகரித்தது. இதன்படி அடிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இடைக்காலச் செயலகமொன்று அமைக்கப்படும்.
உண்மையைத் தேடுவதற்கான நடுநிலையானதும் சுயாதீனமானதுமான பொறிமுறையான்று தாபிக்கப்படும்போது, உண்மைக்கும் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவானது (CTUR) 1983 தொடக்கம் 2009 வரை அல்லது அதற்குப் பின்னர், இலங்கையின் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்ற மோதல்களுடன் தொடர்புபட்டதும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் இடம்பெற்றதுமான சேதங்கள், இழப்புகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை பற்றிய சம்பவங்களைப் புலனாய்வு செய்வதில் கவனஞ்செலுத்தும். உண்மையைக் கூறுவதற்கான தளமொன்றையும் சந்தர்ப்பத்தையும் CTUR வழங்கி, புலனாய்வு செய்து, விசாரித்து. பயனுள்ள தீர்வுகளுக்கும் நிவாரணங்களுக்கும் உரிய முன்மொழிவுகளை வழங்கும். CTUR என்பது, பாராளுமன்றச் சட்டத்தால் தாபிக்கப்படும் சுயாதீன ஆணைக்குழுவாக இருக்கும்.